கடலாடியில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு
கடலாடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் நீதிக்குழும நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை வழக்கு ஒன்றிற்காக கடலாடி போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு 17 வயது ஆகியுள்ள நிலையில் 22 வயது என மாற்றி வழக்கு பதிவு செய்ததோடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணையின்போது கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் காயத்தை மறைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கை பெற்று முதுகுளத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதன்பின்னர் சிறுவனின் வயது சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாதபுரம் இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். நீதித்துறை நடுவர் மன்றம் எண்–1 நீதிபதியும், இளைஞர் நீதிக்குழும தலைவருமான இசக்கியப்பன் விசாரணையின் முடிவில் சிறுவனை தாக்கிய போலீசார் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டதோடு, இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதன்படி சிறுவனை தாக்கியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக பதவி உயர்வு பெற்று தேனி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் கடலாடி போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் முத்துராஜ், மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி, காவலர்கள் முத்துக்குமார், சரவணக்குமார் உள்பட மேலும் 2 போலீசார் மீது கடலாடி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் மேற்கண்டவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:– இளைஞர் நீதிக்குழும நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இளைஞர் நீதிக்குழுமத்தில் விரிவான அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு கூறினார்.