டெங்கு கொசு ஒழிப்பு பணி: வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி, போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி சூர்யாநகரில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், சிமெண்டு தொட்டிகள், குடங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஆட்டுக்கல், கழிவுநீர் வாய்க்கால் போன்றவற்றில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களின் உற்பத்தி உள்ளதா? என்பதை பார்வையிட்டார். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார். புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்களுக்கும் கலெக்டர் சென்று, அங்கு சேமித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் நீர்வரத்து, பொட்டல்களம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பறை, அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். குரங்கணி மலைக்கிராமத்தில் பொது கழிப்பறை அமைக்கும் பணி, கொட்டக்குடி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் போடிமெட்டு மலைப்பாதையில் பார்வையிட்டு, பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ள இடங் களை பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போதும், அந்தந்த பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆய்வின்போது, ‘போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி செல்வராஜ் நகரில் பொது கழிப்பறை சேதம் அடைந்து உள்ளதால் அதனை உடனே சீரமைத்து ஒரு மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குரங்கணி கிராமத்தில் ஒரு மாத காலத்துக்குள் பொது கழிப்பறையை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், அங்கு பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தொலைதொடர்பு இணைப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போடிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், உத்தமபாளையம் உதவி கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஹரி, போடி தாசில்தார் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story