பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 500 படைப்புகள் இடம்பெற்றிருந்தன


பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 500 படைப்புகள் இடம்பெற்றிருந்தன
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 9:11 PM GMT)

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் 500 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்்றும் மத்திய அரசின் கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல், கணிதம், அறிவியல் கண்காட்சி தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இதில் தானியங்கி சிக்னல், ராக்கெட் தொழில்நுட்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆக்வா தொழில்நுட்பத்தில் பயிர்சாகுபடி மற்றும் மீன்வளர்ப்பு, மருத்துவகுணங்கள் கொண்ட தாவரங்கள், தானியங்கள், வேதிவினைகள், ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஏறத்தாழ 500 படைப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. இதில் இப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் அஜீத்-முகிலன் ஹைடிராலிக் கருவிகளை கொண்டு உருவாக்கிய நடமாடும் நாற்காலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றது.

கண்காட்சியில் முதன்மை கல்வி அதிகாரி அருள் அரங்கன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அதிகாரிகள் அம்பிகாபதி, செந்தமிழ்ச்செல்வி, தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story