தியாகதுருகம் அருகே: மர்ம காய்ச்சலுக்கு 2 வயது சிறுமி பலி
தியாகதுருகம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது சிறுமி பலியானாள்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுடைய மகள் தன்யா (வயது 2). கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து சசிகுமார் தன்யாவை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு தன்யாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து விட்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்.
இதனால் சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் தன்யாவை சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்யாவின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. மர்ம காய்ச்சலால் சிறுமி பலியான சம்பவம் கூத்தக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story