குந்தப்பள்ளியில் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு


குந்தப்பள்ளியில் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

குந்தப்பள்ளியில் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், ராமன் என்பவரது வயலில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் வாசுகி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும் கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இத்தகைய கல்வெட்டுக்களே ஆதாரங்களாய் விளங்குகின்றன. எனவே தற்போது கண்டறியப்பட்டுள்ள நடுகல்லுடன் கூடிய கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரண்டாக உடைந்துக் காணப்படும் இந்த நடுகல்லில், புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டு கி.பி. 1,053-ம் ஆண்டை சேர்ந்ததாகும். இப்பகுதி அக்காலத்தில் விரியூர் நாடு என்று அழைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியின் தலைவனாக நித்த விநோதக கங்கன் என்பவன் இருந்துள்ளான். இவனுக்குக் கீழ் இருந்த கடிகாசிங்கன் என்பவனின் தம்பி பல புலிகளைக் கொன்று இறுதியில் ஒரு புலி தாக்கி இறந்துள்ளான். மேலும் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடொன்று மோதி இறுதியில் அவற்றில் ஒன்று இறந்துள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உயிரிழந்த வீரன் மற்றும் காளைக்கும் சேர்த்து இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இடப்பக்கம் இறந்த வீரன் புலியைக் குத்தும் காட்சியும், வலப்பக்கம் இரண்டு காளை மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக தலைகளை முட்டிக்கொள்ளும் காட்சியும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு எடுப்பதைப் போன்றே சண்டையிட்டு இறந்த காளைக்கும் சிறப்பு செய்யும் வகையில் இங்கு நடுகல் எடுத்திருப்பது சிறப்பாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது வரலாற்றை ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், மதிவாணன், காவேரி டேவீஸ், பேராசிரியர்கள் வாசுகி, விஜயகுமார், ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story