தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்


தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 24 Oct 2018 5:00 AM IST (Updated: 24 Oct 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 364 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, மற்றொருவருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story