கைதான 9 நைஜீரியர்கள் புழல் சிறையில் அடைப்பு
திருப்பூர் அருகே கைது செய்யப்பட்ட 9 நைஜீரியர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசி,
திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். மேலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி தங்கி இருந்து வேலை செய்து வருவதாக மாநகர போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து பனியன் நிறுவனங்களுக்கு சென்று அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் அருகே எஸ்.பெரியபாளையத்தில் உள்ள பெருமாள் கார்டன், கூலிபாளையம் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்று அங்கு தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த பிளஸ்சிங்கு (வயது 30), சினேடு (30), பிச்வா (45), யுகோ சிகுவோ (32), டெய் (37), மற்றொரு சினேடு (30), ஸ்டீபன் (35), சுகுமேகா (40), வின்சென்ட் (28) ஆகிய 9 பேரையும் ஊத்துக்குளி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம் பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லை. மேலும் அவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர்களை கைது செய்தபோலீசார், அவினாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு ஸ்ரீ வித்யா அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story