பட்டாபிராமில் அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பேக்கரி கடை ஊழியர். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் பிரதிக்ஷையா (வயது 4). இவர்களுக்கு பிரதீப் (2) என்ற மகனும் இருந்தான். கடந்த 20-ந் தேதி சக்திவேல் வீட்டின் அருகே குவிந்து இருந்த குப்பைகளை மொத்தமாக கூட்டி தீ வைத்தார்.
சிறிது நேரம் கழித்து குப்பைகள் அரைகுறையாக எரிந்த நிலையில் அதன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார். அந்த குப்பையில் இருந்த சில பிளாஸ்டிக் பொருட்கள் உருகிய நிலையில் புகைந்தபடி இருந்தது. குழந்தை பிரதீப் அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது காலில், எரிந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒட்டியது. இதில் வலி தாங்க முடியாத அவன் புகைந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தான். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு கதறி அழுதான். இதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தை பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story