‘சமையல் சிலிண்டர்களை வீடுகளில் எடை போட்டு தான் வழங்க வேண்டும்’ இல்லத்தரசிகள் கோரிக்கை


‘சமையல் சிலிண்டர்களை வீடுகளில் எடை போட்டு தான் வழங்க வேண்டும்’ இல்லத்தரசிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2018 4:38 AM IST (Updated: 24 Oct 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வினியோகம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விரைவாக தீர்ந்து விடுவதால், வீடுகளில் எடைபோட்டுதான் வழங்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் உள்ள மற்றும் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக 45 முதல் 55 நாட்கள் வரை பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தற்போது 25 முதல் 28 நாட்களிலேயே தீர்ந்து விடுவதாக இல்லத்தரசிகள் புகார் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், கோபாலபுரம், ஷெனாய்நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அயனாவரம், பெரியார்நகர், வில்லிவாக்கம், ஆலந்தூர், தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் கியாஸ் விரைவாக தீர்ந்து விடுவதாகவும், இதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கூறி வருகின்றனர்.

வீடுகளில் எடைபோட்டு தர வேண்டும்

இதுபற்றி அடையாறு பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கூறும் போது, ‘நாங்கள், 45 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் வாங்கி வந்தோம். ஆனால் கடந்த 6 மாதமாக 28 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தவறு எங்கு நடக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

ஷெனாய் நகர் கோமதி, அயனாவரம் மேரி, முடிச்சூர் குமாரி ஆகியோர் கூறும் போது, ‘இனி வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் விரும்பினால் எடை போட்டு வழங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவன விதியை கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 14.2 கிலோ என்பதை இல்லத்தரசிகளிடம் நிரூபிக்க வேண்டும்’ என்றனர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த செங்கமலம் கூறும் போது, ‘சென்னையில் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதனை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதிகாரி கருத்து

இதுகுறித்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) சபீதா நட்ராஜ் கூறியதாவது:-

சென்னை மாநகருக்கு எண்ணூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கியாஸ் நிரப்பும் மையங்களில் இருந்து வரும் சிலிண்டர்களைத் தான் ஏஜென்சிகளுக்கு வினியோகம் செய்கிறோம். இங்குள்ள எந்திரங்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுபவை. ஒவ்வொரு சிலிண்டர்களிலும் அடைக்கப்படும் கியாஸ் அளவு மற்றும் தரத்தை கணினி மூலம் துல்லியமாக கணக்கிட்ட பின்னரே சிலிண்டர்கள் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்படுகிறது. குறைந்த எடையில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாது. அவ்வாறு செய்தால் தணிக்கையின் போது தெரிய வந்து விடும். இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை.

புகார் தெரிவிக்கலாம்

இல்லத்தரசிகள் புகார் தெரிவிக்க விரும்பினால் ஏஜென்சியின் பெயருடன் புகார் தரலாம். இதுபற்றி இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கான டுவிட்டர் மற்றும் my-l-pg.in., in-d-a-ne.co.in என்ற இணையதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம். 1800 233 3555 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். கியாஸ் கசிவு ஏற்பட்டால் 1906 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இல்லத்தரசிகளின் புகார் குறித்து அனைத்து ஏஜென்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை எண்ணெய் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. அதில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்தால் அதனை களைய உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story