தன்னம்பிக்கை இருந்தால் உயர்ந்த பதவியை அடையலாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
தன்னம்பிக்கை இருந்தால் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் கந்தசாமி அறிவுரை வழங்கினார்.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பு அனைத்து பாட பிரிவுகளிலும் பயிலும் மாணவர்களில் சிறந்த 150 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் இணைந்து மாவட்டத்தில் உள்ள பழமையான வரலாற்று நினைவிடங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எழிலன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்லூரியில் படிக்கும் பாடத்தினை தான் போட்டி தேர்வுகளுக்கும் படிக்கின்றோம். அதனால் கல்லூரியில் படிக்கும் போதே மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் படிக்காமல், போட்டி தேர்வுக்கு ஏற்றார் போல் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் நிலையில் இருக்கக்கூடாது, படிக்கும் போதே போட்டி தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். போட்டி என வந்தால் முதலில் வருபவர்களுக்கு தான் மதிப்புண்டு. கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே எதிர்காலம் அமையும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் உங்களுக்கான உயர்ந்த பதவியை அடைய முடியும்.
இந்த சுற்றுலாவிற்கான செலவீனத்தொகை ரூ.1¼ லட்சத்தினை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கியுள்ளார். இதுபோல வந்தவாசி, திருவண்ணாமலை கல்லூரி மாணவர்களும் சுற்றுலா செல்ல அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நிதி உதவி வழங்கியுள்ளனர். ஆண்டு தோறும் சுற்றுலா அழைத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி சுற்றுலா பஸ்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். 3 பஸ்களில் 75 மாணவிகள் உளுபட 150 கல்லூரி மாணவர்கள் சீயமங்கலம், நெடுங்குணம், தேவிகாபுரம், திருமலை, செண்பகத்தோப்பு மற்றும் படவேடு ஆகிய வரலாற்று நிகழ்விடங்களுக்கு அழைத்து சென்றனர்.
நிகழ்ச்சியில் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, தாசில்தார் மகேந்திரமணி, அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.மகேந்திரன், கே.வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story