ஆழ்துளை கிணறு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க மானியம் கலெக்டர் தகவல்
விவசாயிகள் ஆழ்துளை கிணறு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2018-2019-ம் ஆண்டில் பிரதம மந்திரி விவசாய நீர் பாசனத்திட்டத்தில் “ஒரு துளி நீரில் அதிக பயிர்” எனும் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.2 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, நிலத்தடிநீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறுவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும், பாதுகாப்பு வேலியுடன் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஒரு பயனாளிக்கு, அதற்காகும் செலவில் 50 சதவீத தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள அக்ராபாளையம், ஆரணி, கண்ணமங்கலம், முள்ளிப்பட்டு, சத்தியவிஜயநகரம், விண்ணமங்கலம், நாட்டோரி, பெருங்கட்டூர், தேத்துறை, வெம்பாக்கம், மங்களம், தெள்ளாறு ஆகிய குறு வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இந்த மானியம் பெறுவதற்கு விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குனர் அல்லது வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த மானிய உதவித்திட்டம், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும் எனவே விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story