பாடவேளையின்போது வகுப்பறையில் இல்லாத ஆசிரியர் பணியிடை நீக்கம் - முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
பாடவேளையின்போது வகுப்பறையில் இல்லாத ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
கல்வியில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, அவ்வப்போது பள்ளிகளுக்கு திடீரென சென்று மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்து வருவதோடு ஆசிரியர்கள் சரியான முறையில் பணிக்கு வருகிறார்களா? என்று ஆய்வு செய்து வருகிறார்.அந்த வகையில் கடந்த 22-ந் தேதி காலை விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 7-ம் வகுப்பு கணித பாடத்திற்கு வகுப்பு எடுக்க வேண்டிய பட்டதாரி ஆசிரியரான ஏகாம்பரம் என்பவர், பணிக்காக பள்ளிக்கு வந்திருந்தும் பாடவேளையின்போது வகுப்பறையில் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர் ஏகாம்பரத்தை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை கவனிக்க தவறியதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story