வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து விட்டு சென்ற கொலையாளிகள்


வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து விட்டு சென்ற கொலையாளிகள்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:45 AM IST (Updated: 25 Oct 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டிக்கொன்றதுடன், தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்துவிட்டு கொலையாளிகள் தலைமறைவாகி விட்டனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி தம்பா கார்த்திக்(வயது 26). இவரும், இவருடைய நண்பர் டேனியல்(வயது 26) என்பவரும் கடந்த 13.08.2018-ந் தேதி இரவு பட்டுக்கோட்டை நரியம்பாளையம் தெருவில் உள்ள பெட்டிக்கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர்.

இதை அறிந்த அந்த தெருவாசிகள் தட்டிக்கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரவுடி தம்பா கார்த்திக், பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். டேனியல் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ்்(26) உள்பட 7 பேரை கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் காலையில் கையெழுத்து போட்டு வந்தனர்.

நேற்று காலை 10.30 மணி அளவில் வழக்கம்போல் பிரகாஷ் உள்பட 7 பேரும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு ஒரு சரக்கு வேனில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். தஞ்சை மெயின் ரோட்டில் ஆலடிக்குமுளை என்ற இடத்தில் உள்ள கார் வாட்டர் சர்வீஸ் நிலையம் அருகே அவர்கள் சென்றபோது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் வேனில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பிரகாசை அந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

அப்படியும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் பிரகாசின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் டீக்கடை எதிரே போக்குவரத்து நிறைந்த தஞ்சை மெயின் ரோட்டில் தலையை வைத்து விட்டு கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.

பட்டப்பகலில் வாலிபரை வெட்டிக்கொன்று தலையை துண்டித்து நடுரோட்டில் வைத்து இருந்ததை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். நடுரோட்டில் துண்டிக்கப்பட்டு கிடந்த பிரகாஷின் தலையை கைப்பற்றினர். பின்னர் அந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் செம்மண் ரோட்டில் கிடந்த உடலையும் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு வீச்சில் பிரகாசுடன் சென்ற வினோத், அஜீத் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவம் பட்டுக்கோட்டை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story