முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அனுமதி பெற்று இருப்பது, தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் - துரைமுருகன்
முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அனுமதி பெற்று இருப்பது தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
கோவை,
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கேரளாவில் சபரிமலை விவகாரம், மழை, வெள்ளம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், கேரள அரசு காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் சிறிய அணையை கட்ட அனுமதி கேட்டால் கூட, சுற்றுச்சூழலை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. ஆனால் கேரள அரசு மட்டும் புதிய அணை கட்ட அனுமதி பெற்று உள்ளது.
இவ்வளவு பெரிய விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தவில்லை. இந்த அரசு கமிஷன், கலெக்ஷனில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முல்லைப்பெரியாறு அணையின் ‘ஏ’ பிளான் சீரமைப்பு பணியின் போது லாரிகளில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கழுதை மீது பொருட்களை ஏற்றிச்சென்று கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.