கோவை கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் தலைவர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கோவை,
தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா?, வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த பொதுக்கணக்கு குழுவின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன் உள்ளார். இந்த குழுவில் மொத்தம் 19 பேர் உள்ளனர்.
இந்த பொதுக்கணக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் சீனிவாசன், கலெக்டர் ஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:– சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி அரசு நிதியை எந்தவொரு பணிக்கும் செலவிட முடியாது. சில நேரங்களில் அவசர தேவைக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், பின்னர் சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு இந்த நிதி குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். நாடாளுமன்றத்தை போல், சட்டமன்றத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் முக்கியமான குழுவாக பொதுக்கணக்கு குழு உள்ளது. இதன் தலைவராக எப்போதும் எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தான் நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்களாக ஆளும் கட்சி மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். இந்த குழுவானது அரசின் நிதி செலவினத்தை முழுமையாக கண்காணிக்கும். மேலும் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதா?. அந்த பணிகளின் தரம் ஆகியவை குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். மத்திய தணிக்கைத்துறை வழங்கும் அறிக்கையின் படியும் இந்த குழு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.