சவூதி அரேபியாவில் வேலை பார்த்த திருவாரூர் டிரைவர் மர்ம சாவு கலெக்டரிடம், மனைவி புகார்


சவூதி அரேபியாவில் வேலை பார்த்த திருவாரூர் டிரைவர் மர்ம சாவு கலெக்டரிடம், மனைவி புகார்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

சவூதி அரேபியாவில் வேலை பார்த்த திருவாரூரை சேர்ந்த டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவருடைய மனைவி, கலெக்டரிடம் புகார் செய்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் (வயது43). இவருக்கும் நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மிதுனகோகிலா(38) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெய்ஸ்ரீராம் (6) என்ற மகன் உள்ளார்.

சவூதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த சிவகார்த்திகேயன் இறந்து விட்டதாக கடந்த 22-ந் தேதி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், சவூதிஅரேபியாவில் இருந்து அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் மிதுனகோகிலா புகார் செய்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று மிதுனகோகிலா திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

சவூதி அரேபியாவில் எனது கணவர் சிவகார்த்திகேயன் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரிடம் இருந்து செல்போன் அழைப்புகள் வராததால், கடந்த 22-ந் தேதி அவருடைய நண்பர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

கடந்த 12-ந் தேதி பணிக்கு சென்றவர் திரும்ப வரவில்லை என்றும், அவர் ஓட்டி சென்ற வாகனத்தின் பின் இருக்கையில் ரத்தம் சிந்திய நிலையில் பிணமாக கிடந்ததாகவும், அவருடைய உடலை போலீசார் எடுத்து சென்று விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் கேட்டபோது, மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார்கள். ஏன் இத்தனை நாளாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டபோது, நிறுவனத்தினர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். எனவே அவருடைய சாவில் மர்மம் உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story