காட்டு யானைகளால் சேதமடைந்த விளை நிலங்களில் கலெக்டர் ஷில்பா ஆய்வு
தென்காசி அருகே காட்டு யானைகளால் சேதமடைந்த விளை நிலங்களில் கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் விவசாயிகளின் விளைநிலங்கள் சேதமடைந்து, பயிர்களும் நாசமாகி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன் பேரில் காட்டு யானைகளால் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிடுவதற்காக மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று தென்காசிக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு வடகரை, பூலாங்குடியிருப்பு, புளியரை ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது யானைகளால் சேதமடைந்த விளைநிலங்கள், தென்னந்தோப்புகளை பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளிடம் இதுகுறித்த குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து விளைநிலங்களுக்கு வரும் பாதையில் தூர்ந்து போன அகழிகளை மீண்டும் தோண்ட வேண்டும். அகழிகள் இல்லாத இடங்களில் புதிய அகழிகள் தோண்ட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழிகள் தோண்டுவதற்கு முன்பாக யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும். இதுதவிர வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையில் நகர பஞ்சாயத்து நிர்வாகம் மின்விளக்குகளை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி ராணி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன் மற்றும் வேளாண்மைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story