பாளையங்கோட்டையில் பஸ் மோதி போலீஸ்காரர்-மனைவி படுகாயம் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு


பாளையங்கோட்டையில் பஸ் மோதி போலீஸ்காரர்-மனைவி படுகாயம் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தனியார் பஸ் மோதி போலீஸ்காரர்-மனைவி படுகாயம் அடைந்தனர். அப்போது பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 42). இவர் அசாம் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்தார். நேற்று சேர்மக்கனி தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மோட்டார்சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் அவரது மனைவி அன்பு செல்வி உட்கார்ந்து இருந்தார்.

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு தனியார் பஸ் வேகத்தடை மீது ஏறாமல் சாலையோரம் உள்ள மண் தரையில் இறங்கிச் செல்ல முயன்றது.

அப்போது சேர்மக்கனி மோட்டார் சைக்கிளில் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் சேர்மக்கனி, அவரது மனைவி அன்பு செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாறுமாறாக ஓடிய பஸ் மீது அங்கு நின்று கொண்டு இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கற்களை எடுத்து வீசினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தது. அப்போது டிரைவர் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், அங்கு நின்று கொண்டு இருந்த கல்லூரி மாணவர்களையும், பொதுமக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story