ஜெயக்குமார் மீது பாலியல் புகார்: அ.தி.மு.க.வுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த முயற்சி அமைச்சர் தங்கமணி பேட்டி


ஜெயக்குமார் மீது பாலியல் புகார்: அ.தி.மு.க.வுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த முயற்சி அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 7:57 PM GMT)

அ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறுகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

தூத்துக்குடியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்களுடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் குற்றாலத்தில் தங்க வைத்து இருக்கிறார்கள். ஐகோர்ட்டில் என்ன தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்து உள்ளார். அந்த ஆடியோ மார்பிங் செய்யப்பட்டது என்று கூறி உள்ளார். அவர் மறுத்த பிறகும் தொடர்ந்து அரசியல் லாபத்துக்காக இது போன்ற சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்று செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. எந்த பணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான கமிட்டியில்தான் முதல்-அமைச்சர் தலைவராக உள்ளார். என்ன விலை, என்ன டெண்டர் என்பதற்கு தனி கமிட்டி உள்ளது. ஆகையால் எந்த தவறும் இல்லை. கோர்ட்டும், குற்றம் செய்து உள்ளார் என்று எங்கும் கூறவில்லை.

தமிழகத்தில் அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. உள்நாட்டில் இருந்து நிலக்கரியை மத்திய அரசு போதிய ஒதுக்கீடு செய்ய முடியாததால் வெளிநாட்டில் வாங்க அனுமதி அளித்தது. அதன்பேரில் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி வாங்கி உள்ளோம். தமிழகத்தில் தேவையான அளவுக்கு மின்சாரம் உள்ளது. தற்போது மின்வெட்டு இல்லாத மாநிலமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story