ராமநாதபுரம் அருகே குப்பை எரிக்கும் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ராமநாதபுரம் அருகே குப்பை எரிக்கும் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பாத்திமா நகர் பகுதியில் குப்பை எரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது பாத்திமா நகர். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் நகராட்சியின் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாத்திமா நகரின் மைய பகுதியில் குப்பைகளை தரம்பிரித்து எரிப்பதற்கான நிலையம் அமைக்க நகரசபை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. நகரசபை பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து எரிக்கப்பட உள்ளது.

இவ்வாறு தரம்பிரித்து குப்பைகளை எரிப்பதால் அந்த பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று நகரசபை நிர்வாகத்தின் சார்பில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணிகளை மேற்கொள்ள ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு குப்பைகளை எரிக்கும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. எந்திரத்தினை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் சுகாதாரகேடு நிலவுவதாகவும், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி உள்ளதாகவும், இந்த நிலையில் மேலும் சுகாதாரகேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை எரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டால் தாங்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் எங்களின் எதிர்ப்பை மீறி நகரசபை நிர்வாகம் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன.


Next Story