பருவமழை தொடங்குவதையொட்டி வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரி தகவல்


பருவமழை தொடங்குவதையொட்டி வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

பருவ மழை தொடங்குவதையொட்டி வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா துணை இயக்குனர் சுதா தெரிவித்தார்.

வண்டலூர் பூங்காவில் வார்தா புயலின் போது பூங்காவில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் விலங்குகளின் இருப்பிடங்கள் சேதம் அடைந்தது. இதனையடுத்து பூங்கா சில மாதங்கள் மூடப்பட்டு படிபடியாக சீரமைப்பு பணிகள் நடந்தது.

வார்தா புயலுக்கு பிறகு இயற்கை நிறைந்த சூழலில் புதுப்பொலிவுடன் பார்வையாளர்கள் சுற்றி பார்ப்பதற்கு வண்டலூர் பூங்காவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பூங்கா துணை இயக்குனர் சுதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வண்டலூர் பூங்காவில் வடகிழக்கு பருவ மழையின் போது பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கனமழையின்போது பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விலங்குகளின் அடைப்பிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதே போல பொதுமக்கள் சுற்றி பார்க்கும் இடத்தில் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதத்தில் 33 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையாளர்களை கண்காணித்து வருகிறோம்.

மழை காலங்களில் பூங்காவில் உள்ள பழமையான சுற்றுசுவர் இடிந்து விழும்போது விலங்குகள் தப்பித்து விடுவதாக வதந்திகள் பரவுகிறது. இது முற்றிலும் தவறு, விலங்குகள் ஒரு போதும் தப்பித்து போக முடியாது. கனமழை பெய்யும் போது விலங்குகள் தாமாகவே கூண்டுக்குள் சென்றுவிடும், மேலும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் கேன்கள் எடுத்து வருவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்காக 5 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story