விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை விளைபொருட்கள் நேரடியாக விற்பனை தமிழக அரசு தகவல்


விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை விளைபொருட்கள் நேரடியாக விற்பனை தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விவசாயிகளின் தோட்டக்கலை விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. விவசாயிகளின் உற்பத்தியை இருமடங்காக்கி, அதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பெருக்க தமிழ்நாடு அரசு பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரமான விளைபொருட்களையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் நேரடியாக சந்தைப்படுத்தும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான தோட்டக்கலை விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஒரு புதிய முயற்சியாக சமையலுக்கு நறுமணமூட்டும் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் மற்றும் நீரா சர்க்கரை ஆகியவற்றை குறைந்த விலையில் நுகர்வோர் பயனடையும் வண்ணம் விற்பனைக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்துகிறது.


ஏலக்காய் (50 கிராம்), மிளகு (50 கிராம்), கிராம்பு (50 கிராம்), ஜாதிக்காய் (30 கிராம்), ஜாதிபத்திரி (20 கிராம்), லவங்கப்பட்டை (25 கிராம்) ஆகிய ஆறு வகையான நறுமணமூட்டும் பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ.300-க்கு விழாக்காலங்களை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட சுவையூட்டப்பட்ட முந்திரி, மா, அன்னாசி, நெல்லி, பலா போன்ற பதப்படுத்தப்பட்ட பழங்கள் போன்றவற்றையும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் நீரா சர்க்கரை மற்றும் நீரா கருப்பட்டி போன்றவற்றையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை செம்மொழிப் பூங்காவில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை மையத்தில் சமையலுக்கு நறுமணமூட்டும் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் மற்றும் நீரா சர்க்கரை ஆகியவற்றின் முதல் விற்பனையை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி 24-ந் தேதி (நேற்று) தொடங்கி வைத்தார்.

நறுமணமூட்டும் பொருட் கள் அடங்கிய பாக்கெட்டுகள் மற்றும் உலர்ந்த பழங்கள் அடங்கிய பாக்கெட்டுகள் மாவட்டங்களிலுள்ள தோட்டக்கலை இணை இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தோட்டக்கலை பூங்காக்கள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை அதிக அளவில் வாங்க விரும்புவோர் 9942835261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது dd.do-h-pc.chn2@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம்.

விவசாய விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், குறைந்த விலைக்கு தரமான பொருட்களை நுகர்வோர் பெறமுடியும். எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், விவரங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இணையதளம் http://tnh-o-rt-i-cu-ltu-re.tn.gov.in மற்றும் @thott-a-k-a-l-ai என்ற டுவிட்டர் கணக்கின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story