மின் கசிவால் வீட்டில் தீ விபத்து: திருமண மண்டப உரிமையாளர் உடல் கருகி சாவு


மின் கசிவால் வீட்டில் தீ விபத்து: திருமண மண்டப உரிமையாளர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில், திருமண மண்டப உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்தார்.

ஆவடியை அடுத்த வீராபுரம் அலமாதி சாலையை சேர்ந்தவர் ராஜன் (வயது 64). இவர் ஆவடி புதிய ராணுவ சாலையில் இயங்கி வந்த திரையரங்கின் உரிமையாளர். தற்போது அந்த திரையரங்கு திருமண மண்டபமாக செயல்பட்டு வருகிறது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் வீல் நாற்காலியில் தான் நடமாடுவார். மற்ற நேரங்களில் படுத்து இருப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக வீராபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் ஆவடி கன்னாமா நகரை சேர்ந்த பானுமதி (52) என்பவர் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை ராஜனுக்கு டீ போட்டு கொடுத்து விட்டு பானுமதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் ராஜனின் அறையில் இருந்து புகை வந்தது. இதுபற்றி ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரும், ஆவடி தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தன்னால் எழுந்து வெளியே வர முடியாததால் ராஜன் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story