கிருஷ்ணகிரி அருகே: ராணுவ வீரரின் மனைவி மர்ம சாவு - உறவினர்கள் சாலைமறியலுக்கு முயற்சி


கிருஷ்ணகிரி அருகே: ராணுவ வீரரின் மனைவி மர்ம சாவு - உறவினர்கள் சாலைமறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரரின் மனைவி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி, 


கிருஷ்ணகிரியை அடுத்த கல்லக்குறி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 30). ராணுவ வீரர். இவரது மனைவி பாஞ்சாலி (22). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று மதியம் 2 மணிக்கு பாஞ்சாலி விஷம் குடித்து இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சிலர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பாஞ்சாலியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, போலீசில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டவுன் போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்துவார். அதன் பின்னர் தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Next Story