பாலியல் புகார் குறித்து அடுத்தவர்கள் பேசிக் கொண்டு இருப்பது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி
பாதிக்கப்பட்ட பெண்ணே சம்பவத்தை மறக்க விரும்பும்போது பாலியல் புகார் குறித்து அடுத்தவர்கள் பேசிக் கொண்டு இருப்பது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
இந்தி பட இயக்குனர் விகாஸ் பால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். குற்றச்சாட்டை கூறிய பெண்ணுக்கு ஆதரவாக இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானே மற்றும் தயாரிப்பாளர் மதுமந்தேனா ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் இயக்குனர் விகாஸ் பால் ரூ.10 கோடி கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சமீபத்தில் நீதிபதி கதாவாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீ டூ இயக்கத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
மறக்க விரும்புகிறார்
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கதாவாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான வக்கீல் வைத்த வாதம் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார். ஆனால் நடந்த சம்பவங்களை அவர் மறக்க விரும்புகிறார். எனவே வழக்கை தொடர விரும்பவில்லை என்று வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், “நடந்த சம்பவத்தை மறக்க சம்பந்தப்பட்ட பெண் விரும்புகிறார். அவரது விருப்பத்துக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டாமா?. நிலைமை இப்படி இருக்கும்போது, மற்றவர்கள் (அனுராக் கஷ்யப், விக்ரமாதித்யா மோத்வானே, மதுமந்தேனா) ஏன் அதைபற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 3-ம் நபர்கள் பெயரில் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story