கிணற்றில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே கிணற்றில் தொழிலாளி பிணம் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற காளியப்பன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தர்மபுரி தீயணைப்பு படையினர் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தது காளியப்பன் என தெரியவந்தது. காளியப்பனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். காளியப்பன் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story