தாம்பரம் அருகே வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
தாம்பரம் அருகே வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி அமுதா ஆய்வு செய்தார்
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர், திருவஞ்சேரி மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி அமுதா ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.
திருவஞ்சேரி ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாயின் குறுக்கில் கட்டப்பட்டு வரும் சிறுபாலம், சாய் நகர், எம்.ஜி.ஆர். தெருக்களில் கட்டப்பட்டு உள்ள சிறுபாலங்கள், மழைநீரை மாடம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் ஆகிய பணிகளை ஆய்வு செய்த அதிகாரி அமுதா, அந்த பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை புறநகர் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைதொடர்ந்து மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி அமுதா, நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 26-ந்தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை முதல்-அமைச்சர் அழைத்து, அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றுள்ள வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
தாம்பரம் அருகே உள்ள திருவஞ்சேரியில் கடந்த ஆண்டுகளில் பெய்த மழையால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், இந்த ஆண்டு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.12 கோடியில் சிறுபாலங்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
பேரூராட்சி மூலமாக ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் கால்வாய் பணிகள் நடைபெற்று உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மூலமாக ரூ.60 லட்சத்துக்கு பணிகள் நடைபெற்று உள்ளது. ஒரு பஞ்சாயத்திலேயே ரூ.14 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
வருகிற மழை காலத்தில் முழுஅளவு மழைநீரையும் கால்வாய் மூலமாக மாடம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல கடந்த மழை காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரூ.392 கோடிக்கு பணிகள் நடைபெற்று உள்ளது. நிறைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்து உள்ளேன்.
ஒரு துறையின் மூலம் எல்லா பணிகளும் செய்ய முடியாது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறையினர் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு வரைமுறை உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அலுவலகத்திற்கு வந்து பணி ஆணையை பெற்றுச்செல்லுங்கள். உங்களுக்காகத்தான் பணிகள் செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் பகுதியை பாதுகாக்கத்தான் எல்லாஅதிகாரிகளும் இரவு-பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதிகாரிகள் நல்லமுறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இந்த மழைக்கு எந்த இடத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story