பாலாற்றில் புதிதாக 6 மணல் குவாரிகள் இடங்கள் தேர்வுசெய்து அரசுக்கு பரிந்துரை
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 மணல் குவாரிகள் திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மணல்குவாரிகள் திறந்தால் மணல் திருட்டு குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் தொடங்கும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்தான் பாலாறு நீண்டதூரம் ஓடுகிறது. இந்த பாலாற்றில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள பட்டு என்ற இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் மணல்குவாரி நடத்தப்படுகிறது. இங்கு மாட்டு வண்டிகளில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் மணல்தேவை அதிகமாக இருப்பதால் பாலாற்றில் மணல்திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. மாட்டுவண்டிகள் மட்டுமின்றி ஆட்டோ, டிராக்டர், லாரி போன்ற வாகனங்களிலும் மணல் கடத்தப்படுகிறது. காவல்துறை, வருவாய்த்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் மணல்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கடத்தல் தொடர்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.2¾ கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள நவ்லாக் பகுதியில் பாலாற்றில் மணல்குவாரி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக இதுவரை மணல்குவாரி தொடங்கப்படாமல் உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் தொடர்ந்து தினமும் மணல் கடத்தல் நடைபெறுவதால் பாலாறு பாழாகி வருகிறது. இதனை தடுக்கவும், பொதுமக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் மணல் குவாரி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பசுமாத்தூர், வடவிரிஞ்சிபுரம், மேலூர், மேல்மொணவூர், அரும்பருதி, ஏகாம்பரநல்லூர் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மணல்குவாரிகள் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 இடங்களில் மணல் குவாரிகள் திறந்தால் மணல்திருட்டை கட்டுப்படுத்தலாம் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story