மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க நடவடிக்கை ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு


மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க நடவடிக்கை ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

தாய் மொழி, முதல் மொழி நம் தமிழ் மொழி. என் நண்பர் ஒருவர் மலைவாழ் மக்களின் மொழி, கலாசாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவர் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள மலைவாழ் மக்களிடம் ஆய்வு செய்ததில் அவர்களின் தோற்றம், மொழி, உச்சரிப்பு சிலவகைகள் தமிழோடு ஒத்து போவதாக தெரிவித்தார். இது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி ஆகும்.

ஒரு நாட்டின் சிறப்பு அதன் தாய்மொழியிலும், கலாசாரத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பதில் உலக சாதனை புரிந்தார்கள். தமிழ் எழுத்துக்களை பார்த்து வாசித்து உச்சரித்தால் வார்த்தை தானாக வரும், அதுதான் தமிழின் பெருமை.

ஆனால் ஆங்கிலம் உள்பட பிற மொழிகளில் எழுத்துக்களை வைத்து வார்த்தைகள் வராது. மேலை நாடுகளில் முதல் கல்வி தாய்மொழியில் தான் கற்று தருகிறார்கள்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சுத்தமான, அழகான தமிழ் பேசுகிறார்கள். தென் ஆப்பிரிக்கா நாட்டில் 4-ம் தலைமுறையாக வசிக்கும் 1½ லட்சம் தமிழர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்களிலும் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் இருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றார்கள். மேலும் இதில், 2016-ம் ஆண்டு ஆட்சி மொழித் திட்ட செயலாகத்தில் சிறந்து விளங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு கலெக்டர் கேடயம் வழங்கினார்.

இதில் தமிழ் வளர்ச்சி இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் (பொறுப்பு) கே.விசயராகவன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) பவானி, அகரமுதலித் திட்ட இயக்குனர் (பணி நிறைவு) செழியன், தொழிலாளர் உதவி ஆணையர் (செயலாக்கம்) செந்தில்குமரன், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மண்ணுலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story