கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதைவிட 18 எம்.எல்.ஏ.க்களும் மக்கள் மன்ற தீர்ப்புக்கு தயாராக வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை
கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதைவிட 18 எம்.எல்.ஏ.க்களும் மக்கள் மன்ற தீர்ப்புக்கு தயாராக வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தமிழக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பது தெரிந்ததுதான். தீர்ப்பை ஒவ்வொருவரும் மாறுபட்ட கோணத்தில் பார்த்தாலும், விமர்சித்தாலும் இது அரசியல் விளையாட்டு என்பதுதான் உண்மை. கோர்ட்டின் தீர்ப்பை விட மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. கோர்ட்டிலே வழக்கை போட்டுவிட்டு தொடர்ந்து மக்களை குழப்புவதில் யாருக்கு லாபம். 18 எம்.எல்.ஏ.க்கள் இல்லாத தொகுதிகளில் நீண்ட நாட்களாக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாக தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பல அரசியல் பிரச்சினைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும். மேல்முறையீடுகள் செய்து கோர்ட்டு தீர்ப்புகளுக்கு காத்திருப்பது என்பது மக்களை சந்திக்க தயக்கம் என்று பொருள்படும். இந்த சூழ்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் மக்கள் மன்றத்திற்கு ஒரு வாய்ப்பளித்து மக்களின் தீர்ப்புக்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறி உள்ளார்.