ஜம்பையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


ஜம்பையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஜம்பையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பவானி,

பவானியை அடுத்து ஜம்பை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 8 மணி அளவில் காலிங்குடங்களுடன் ஜம்பை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சத்தியமங்கலம்–பவானி மெயின் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களின் சாலைமறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட ஜம்பை, பெரியபாளையம், சின்னமோளபாளையம், நல்லிபாளையம், நத்தகாடு, சீதபாளையம் உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தியதால் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சியில் கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘உரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதோடு 2 நாட்களில் குடிநீர் வழங்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 9 மணி அளவில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story