காட்டுயானையை பிடிக்க தேவாரத்துக்கு சென்ற கும்கிகள்
காட்டுயானையை பிடிப்பதற்கு கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் தேவாரத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டன.
கம்பம்,
தேவாரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள எள்ளு பாறை, தாழையூத்து, சாக்கலூத்து மெட்டு உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுயானை ஒன்று விளைநிலங் களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலிம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வனத்துறையினர் கொண்டு வந்தனர். பின்னர் கும்கி யானைகள் தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டது. வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுயானையின் வழித்தடத்தில் கும்கி யானைகளை அழைத்து சென்றனர். தொடர்ந்து ஒரு மாதமாக அந்தப்பகுதியில் கும்கி யானைகள் தங்க வைக்கப்பட்டு இருந்ததால், காட்டுயானை வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தது.
இந்த நிலையில் கும்கி யானைகளின் இனப்பெருக்க காலம் நெருங்கியதால் மீண்டும் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதிக்கு அதனை கொண்டு சென்றனர். இதனால் காட்டுயானையை பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கைவிடப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த காட்டுயானை தேவாரம் மலையடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் பீதியடைந்தனர். உடனே அந்த காட்டுயானையை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த காட்டுயானையை பிடிக்க மீண்டும் 2 கும்கி யானைகளை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 16-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வசிம், விஜய் என்ற 2 கும்கி யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அந்த கும்கி யானைகள் வனத்துறை அலுவலகத்தின் பின்புறமுள்ள பகுதியில் தங்க வைக்கப்பட்டு வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அந்த 2 கும்கி யானைகளையும் லாரியில் ஏற்றி தேவாரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். தேவாரத்தில் டி.ரெங்கநாதபுரத்தை அடுத்த பொன்குன்றத்தில் முருகன் கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் கும்கி யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, அட்டகாசம் செய்யும் காட்டுயானையின் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கும்கி யானைகளுக்கு இப்பகுதி சூழல் நன்றாக ஒத்து போவதற்காக சிறிது நாட்கள் கம்பத்தில் தங்க வைக்கப்பட்டது. நேற்று கும்கி யானைகளை லாரி மூலம் தேவாரம் மலையடிவார பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, காட்டுயானையை பிடிக்கும் பணி விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story