வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று வேலூரிலும் காத்திருப்பு போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் வந்தனர். காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் கலெக்டர் அலுவலகம் எதிரே தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவராக கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர்.
இவ்வாறு நூற்றுக்கணக்கானவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு சென்று கூடிவிட்டனர். இதனால் வெளியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அதற்குள் சத்துணவு ஊழியர்கள் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடத் தொடங்கினர். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், உணவு உண்ணும் மாணவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உணவு மானியத்தை 5 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்துக்கு அனுமதியில்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். 80 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 100 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story