பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கு: ரவுடி மோகன்ராமை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி


பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கு: ரவுடி மோகன்ராமை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
x
தினத்தந்தி 26 Oct 2018 3:00 AM IST (Updated: 25 Oct 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் ரவுடி மோகன்ராமை போலீஸ் காவலில் விசாரிக்க திண்டுக்கல் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (வயது 40). இவர் மீது தமிழகத்தில் 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, கடந்த 2015-ம் ஆண்டு கோவை சூலூரில் 3 பேரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை சூலூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் மும்பையில் பதுங்கி இருந்த மோகன்ராமை, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் அவர், கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோகன்ராமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சூலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, மோகன்ராமை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 22-ந்தேதி மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார்.

அதன்படி போலீசார் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே திண்டுக்கல்லில், பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் மோகன்ராமின் கூட்டாளி நரைமுடி கணேசன் கைதானார். அந்த வழக்கில், நரைமுடி கணேசனுக்கு துப்பாக்கி வழங்கிய மோகன்ராம் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, மோகன்ராம் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் தரப்பில் அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் அனுமதி அளித்தார். மேலும், இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து மோகன்ராமை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று திண்டுக்கல் தெற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story