திருப்பூர் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


திருப்பூர் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே பாரப்பாளையத்தில் உள்ள மூளிக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து கொண்டிருக்கின்றன. சாயக்கழிவுநீர் கலந்ததால், மீன்கள் செத்து மிதக்கிறதா? என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் அருகே உள்ள மண்ணரை பாரப்பாளையத்தில் மூளிக்குளம் உள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பின. அதுபோல் இந்த மூளிக்குளமும் நிரம்பியது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூளிக்குளம் மற்றும் குளத்தின் கரையோரங்களில் பனியன் நிறுவன கழிவுகள், சாயக்கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டுவதாக தெரிகிறது.

இதன் காரணமாக குளத்தில் உள்ள நீரில் சாயக்கழிவுகள் மற்றும் பனியன் நிறுவன கழிவுகள் அதிகமாக கலந்ததால், மீன்கள் நேற்று முன்தினத்தில் இருந்து செத்து மிதந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்றும் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று காலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் பாரதிகுமார் மற்றும் அதிகாரிகள், வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் மூளிக்குளத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மூளிக்குளத்தில் இருந்து தண்ணீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிசோதனை செய்வதற்காக சேகரித்தனர்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:– மூளிக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதற்கு சாயக்கழிவுநீர் கலந்தது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கூடத்திற்கு மூளிக்குளத்தின் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

மேலும், இந்த பகுதியில் சாயக்கழிவுகளை பலர் கொண்டு வந்து கொட்டுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். குளத்தில் சாயக்கழிவுகள் மற்றும் பின்னலாடை நிறுவன கழிவுகளை கொண்டு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த பகுதி கண்காணிக்கப்படும். மேலும், அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story