வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் புகுந்த 2 சிறுத்தைப்புலிகளால் பரபரப்பு
வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் 2 சிறுத்தைப்புலிகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறை,
வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 12–ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த 10 பெண்கள் தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தைப்புலிகள் தேயிலை தோட்ட பகுதி வழியாக ஓடி வந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது சிறுத்தைப்புலிகள் சில தோட்ட தொழிலாளர்களை துரத்த முயன்றது. உடனே அங்கிருந்த தோட்ட அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அங்குள்ள வனச்சோலை பகுதிக்குள் ஓடி மறைந்தது. இதையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வேறு பகுதியில் பணி செய்ய அனுப்பி வைத்தனர். தோட்ட தொழிலாளர்களை சிறுத்தைப்புலிகள் துரத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:–
கடந்த பல நாட்களாகவே நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது. தற்போது பட்டப்பகலிலேயே சிறுத்தைப்புலிகள் நடமாடுவது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிறுத்தைப்புலி வந்து சென்ற இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த வடமாநில தொழிலாளியின் குழந்தையை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 8 –ந் தேதி நடந்தது.
எனவே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும் சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எஸ்டேட் பகுதிகளிலும் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறுகுழந்தைகளை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.