வேலூர் மத்திய சிறையில் கைதி சாவு தொடர் சம்பவத்தால் கைதிகள் அதிர்ச்சி


வேலூர் மத்திய சிறையில் கைதி சாவு தொடர் சம்பவத்தால் கைதிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 Oct 2018 4:00 AM IST (Updated: 26 Oct 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் மேலும் ஒருகைதி இறந்தார். தொடர் சம்பவத்தால் மற்ற கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிறையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய்க்கு சிகிச்சைபெற்று வருகிறார். அதேபோன்று பல்வேறு கைதிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகிறார்கள். மேலும் சில கைதிகள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 54) என்பவர் கொலைவழக்கு ஒன்றில் தண்டனை பெற்று வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்றுமுன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதும், சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையாகிவரும் சம்பவம் சிறையில் உள்ள மற்ற கைதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story