ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு வழங்கிய நிலத்தை திரும்ப கேட்கும் விவசாயிகள்; கலெக்டரிடம் முறையிட முடிவு
ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலை நலிவடைந்த நிலையில் தங்களுக்கு வேலை வழங்கப்படாததால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முறையிட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தாயில்பட்டி,
பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்டு ஆலை தொடக்க காலத்தில் உற்பத்தியில் சாதனை படைத்தது. இங்கிருந்து சிமெண்டு கொண்டு செல்ல மீட்டர் கேஜ் ரெயில்பாதை, ரெயில் நிலையம் கூட அப்போது அமைக்கப்பட்டது. இதில் கிடைத்த லாபத்தால் அரியலூரில் சிமெண்டு ஆலை திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆலை நலிவடைந்து விட்டது. உற்பத்தி குறைந்துவிட்டதோடு பலர் வேலை இழந்து விட்டனர். அங்குள்ள பள்ளியும் முறையாக கவனிக்கப்படாத நிலையில் 1,700 பேர் படித்த நிலையில் அந்த எண்ணிக்கை 450 ஆக குறைந்து இருக்கிறது. ஆலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு பலவகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது.
இங்குள்ள சுண்ணாம்பு குவாரிகளில் 6 குவாரிகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதில் தோண்டியெடுக்கப்பட்ட பாறை உள்ளிட்டவற்றை ஏலம் விட்டு உடைத்து சாலை பணிக்கு பயன்படுத்தலாம் அதனால் வருமானம் கிடைக்கும். குவாரி தண்ணீரில் மீன் வளர்த்து ஏலம் விடலாம் என்று வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுத்த யோசனைகள் பலன் தரவில்லை. மாறாக கழிவுகள் குவிந்து கிடக்கும் இடங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஆலைக்காக விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கல்லமநாயக்கர் பட்டி, சுண்டங்குளம், புலிப்பாறைப்பட்டி, கோபாலபுரம், கொங்கன்குளம், சிவலிங்காபுரம், புலியம்பட்டி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட எல்லைவரை ஆலைக்கு இடம் உள்ளது. நிலம் கொடுத்தோருக்கு ஆலையில் வேலை கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தில் அப்போது நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். ஆனால் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை.
ஆலையை நவீனப்படுத்த நிதி கிடைக்கவில்லை. இனி வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை என கருதும் விவசாயிகள், தரிசாக கிடக்கும் தங்களது நிலத்தை திரும்ப கொடுத்தால் விவசாயம் செய்தாவது பிழைக்க முடியும் என்கின்றனர். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட முடிவு செய்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.