திண்டுக்கல்லில் மில் வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்ட தி.மு.க. செயலாளர் உடல் தோண்டி எடுப்பு: கடனை திருப்பி தராததால் தீர்த்துக்கட்டிய நண்பர்கள் கைது
திண்டுக்கல்லில் கொன்று புதைக்கப்பட்ட தி.மு.க. வார்டு செயலாளரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடனை திருப்பி தராததால் கொன்றதாக போலீசில் கைதான நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்த தம்பிராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 26). இவர் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். மேலும், தென்மலை ஊராட்சி 8-வது வார்டு தி.மு.க. செயலாளராகவும் இருந்தார். இவருக்கு, திருமணமாகி வான்மதி என்ற மனைவியும், 1½ மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அனைவரும் பொன்னகரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 19-ந்தேதி வெளியே சென்ற பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வான்மதி திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பாலசுப்பிரமணியனின் நண்பரான பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்திகேயனை(27) நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது, பாலசுப்பிரமணியன் கடனை திருப்பி தராததால் நண்பர் சரவணனுடன் (23) சேர்ந்து அவரை கொன்று ஒரு தனியார் மில்லில் புதைத்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், புதைக்கப்பட்டதாக கூறிய திண்டுக்கல்-நத்தம் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பின்புறமுள்ள தனியார் மில்லுக்கு கார்த்திகேயனை அழைத்து சென்றனர்.
அங்கு புதைத்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார். அப்போது, இரவு நேரமாகிவிட்டதால் உடலை தோண்டி எடுக்கவில்லை. அன்று இரவே மற்றொரு நண்பரான சரவணனை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், நேற்று உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் ஜியானா ஜெயந்தி, தடய அறிவியல் ஆய்வக அலுவலர் ரமேஷ் ஆகியோர் திண்டுக்கல் வந்தனர்.
பின்னர், தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கொலை செய்து உடலை ஒரு சாக்கில் கட்டி புதைத்து வைத்திருந்தனர். அதனை எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், சரவணன் ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
பாலசுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணன் ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்களில் கார்த்திகேயன் பாலசுப்பிரமணியனுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். மேலும், அவரை கொலை செய்து புதைக் கப்பட்ட தனியார் மில்லை குத்தகைக்கு எடுத்திருந்தார். சரவணன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், சரவணன் தான் வேலைபார்த்து வந்த தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். அதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பாலசுப்பிரமணியனுக்கு 3 தவணையாக கடன் கொடுத்து இருக்கிறார். இதற்கிடையே, ரூ.5 லட்சம் கையாடல் செய்ததை தனியார் நிறுவனத்தினர் கண்டறிந்து அவரிடம் பணத்தை கேட்டுள்ளனர். உடனே, சரவணன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இந்தநிலையில், சரவணனை தனியார் நிறுவனத்தினர் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் கடந்த வாரம் மீண்டும் பாலசுப்பிரமணியனிடம் பணத்தை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. உடனே, வீட்டுக்கு சென்ற சரவணன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்தார்.
இதையறிந்த கார்த்திகேயன் அவரை பார்க்க சென்றார். அப்போது, பணத்தை கொடுத்தவன் ஏன் சாக வேண்டும். கடனை திருப்பி தராத பாலசுப்பிரமணியனை கொன்றுவிடுவோம் என்று இருவரும் திட்டம் போட்டுள்ளனர். அதன்படி, இருவரும் கடந்த 21-ந்தேதி இரவு நத்தம் சாலையில் உள்ள மில்லுக்கு வருமாறு பாலசுப்பிரமணியனை அழைத்தனர். அங்கு 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
போதை தலைக்கேறியதால் பாலசுப்பிரமணியன் அங்கேயே படுத்துவிட்டார். இந்த நேரத்தை எதிர்பார்த்த இருவரும் பெரிய கல்லை தூக்கி பாலசுப்பிரமணியனின் தலையில் போட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார். உடனே, இருவரும் சேர்ந்து அங்குள்ள ஒரு அறையின் வாசல் முன்பு குழி தோண்டி உடலை புதைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story