ராமேசுவரத்தில் நகராட்சி டிரைவர் தற்கொலை; அதிகாரிகள் நெருக்கடியே காரணம் என கடிதம்
ராமேசுவரத்தில் நகராட்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் துளசிபாபா மடம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 56). இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற இவர் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.
பின்னர் காலை 6 மணி அளவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் அங்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நாகராஜ் வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் தூக்குப்போட்ட அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தனது சாவுக்கு நகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் தான் காரணம் என்றும், அவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் நாகராஜின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைதொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.