நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார்: நடிகர் அர்ஜூனுக்கு பிரகாஷ்ராஜ் ‘திடீர்’ ஆதரவு ‘இருவரையும் அழைத்து பேசி திரைத்துறையினர் தீர்வு காண வேண்டும்”
நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்த விவகாரத்தில் நடிகர் அர்ஜூனுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு திரைத்துறையினர் தீர்வு காண வேண்டும் என்கிறார்.
பெங்களூரு,
நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த நடிகை சுருதி ஹரிகரன், அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் முதலில் சுருதி ஹரிகரனுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு வழங்கினார். நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் அர்ஜூனுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென நேற்று ஆதரவு தெரிவித்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நடிகர் அர்ஜூன் எனது நீண்டகால நண்பர் மற்றும் சக பயணி. மற்றவர்களை விட அவரை எனக்கு நன்றாக தெரியும். நான் எங்கும் அவரை குற்றவாளி என்று சொல்லவில்லை. யார் மீதும் தேவை இல்லாமல் குற்றம் சொல்ல மாட்டேன். சுருதி ஹரிகரன், அனைவரும் குற்றம் சொல்லும் அளவுக்கு சந்தர்ப்பவாத பெண் அல்ல. அவர் ஒரு திறமையான பெண்மணி.
நம் அனைவரையும் போல் அவரையும் இந்த சமூகம் தான் வளர்த்துள்ளது. அர்ஜூனும், சுருதி ஹரிகரனும் திரைத் துறையிலும், சமூக சேவையிலும் இன்னும் அதிகளவில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள். இந்த விஷயத்தில் நான் கூறும் கருத்து அனைவருக்கும் நன்றாக புரிந்தால் நல்லது. எந்த ஒருசார்பும் இல்லாமல், திரைத்துறையை சேர்ந்த மூத்தவர்கள், இருவரையும் அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story