சிதம்பரத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் பணம் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிதம்பரத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் சரஸ்வதி விளாகம் தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன் (வயது 38). இவர் போல்நாராயணன் தெருவில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம் போல விஜயேந்திரன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது, மர்மநபர்கள் கடையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதே போல் விஜயேந்திரனின் பக்கத்து கடைகளான நடராஜன் என்பவரது கம்ப்யூட்டர் கடையில் ரூ.1,300-ம், விஜயமார்த்தாண்டம் என்பவரது கம்ப்யூட்டர் கடையில் ஒரு எல்.இ.டி. பல்பும், கலைவாசன் என்பவரின் டிஜிட்டல் பிரிண்டர் கடையில் ரூ.500-ம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் விஜயேந்திரன் உள்பட அடுத்தடுத்து 4 பேரின் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் எல்.இ.டி. பல்பு ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அங்குள்ள மகாராஜன் என்பவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றதும் தெரிந்தது.
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் பணம் திருட்டுபோன சம்பவம் சிதம்பரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story