உடல் நலம் பாதித்த சகோதரரை பார்ப்பதற்காக இளவரசி 15 நாட்கள் பரோலில் விடுதலை காரில் சென்னை சென்றார்


உடல் நலம் பாதித்த சகோதரரை பார்ப்பதற்காக இளவரசி 15 நாட்கள் பரோலில் விடுதலை காரில் சென்னை சென்றார்
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலம் பாதித்த சகோதரரை பார்ப்பதற்காக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி 15 நாட்கள் பரோலில் நேற்று விடுதலை ஆனார். இதையடுத்து அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

பெங்களூரு, 
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேரும் கடந்த ஆண்டு(2017) பிப்ரவரி மாதம் முதல் சிறையில் உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் சசிகலா 2 முறை ‘பரோலில்’ சென்று வந்தார். இந்த நிலையில், இளவரசியின் சகோதரர் வடுகநாதன் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது சகோதரர் வடுகநாதனை பார்க்க ‘பரோல்’ வழங்க வேண்டும் என்று இளவரசி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று சிறைக்கு இளவரசியின் மகன் விவேக், வக்கீல் அசோகன் ஆகியோர் வடுகநாதனுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை எடுத்து வந்து சிறைத்துறையிடம் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்கள் மற்றும் இளவரசியின் ‘பரோல்’ மனுவை சிறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். பின்னர், இளவரசிக்கு 15 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அதாவது அடுத்த மாதம்(நவம்பர்) 8-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பரோலில் விடுதலையான இளவரசிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ‘பரோல்’ மனுவில் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டில் மட்டுமே தங்க வேண்டும். சென்னையை விட்டு வெளியேறக்கூடாது. பரோல் மனுவில் அவர் தங்குவதாக குறிப்பிட்டுள்ள வீட்டில் இருந்து மருத்துவ மனைக்கு மட்டுமே அவர் சென்று வர வேண்டும். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஊடகங்களை சந்திக்க கூடாது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகள் இளவரசிக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இளவரசி சிறையில் இருந்து வெளியே வந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் டி.நகரில் உள்ள மகன் விவேக்கின் வீட்டில் இளவரசி தங்குகிறார்.


Next Story