திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 330 பேர் கைதாகி விடுதலை


திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 330 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 330 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பணப்பயன் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய செலவை வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜன், தேவஅதிசயம், குணசுந்தரி, மாவட்ட இணை செயலாளர்கள் தேவசம்பத், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் காந்திமதிநாதன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பெண்கள் உள்பட 330 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து, திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலான் கேட்டில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் பூங்குழலி, மாவட்ட செயலாளர் பக்கிரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டதலைவர் லெனின் உள்பட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story