பணியில் தலையீடு காரணமாக அரசு மீது போலீசார் வெறுப்பில் உள்ளனர்- அசோக் சவான் குற்றச்சாட்டு
பணியில் தலையீடு காரணமாக அரசு மீது போலீசார் வெறுப்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குற்றம்சாட்டினார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் ‘சங்கர்ஷ் யாத்ரா’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் நேற்று லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் யாத்திரை சென்று பிரசாரம் செய்தனர். அப்போது அசோக் சவான் பேசியதா வது:-
உத்கிர் பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 12 நாட்களுக்கு அல்லது 15 நாட்களுக்கோ ஒருமுறை தான் இங்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மராட்டியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மரத்வாடா மண்டலத்தின் குடிநீர் ஆதாரமாகவும் உயிர்நாடியாகவும் இருக்கும் ஜெயக்வாடி அணையில் வெறும் 37 சதவீதம் தண்ணீர் தான் இருப்பில் உள்ளது.
லாத்தூரின் முக்கிய குடிநீர் ஆதாரமான மன்ஜாரா அணை சுத்தமாக நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
தொழிற்சாலைக்கும், விவசாயிகளுக்கும் தேவையான தண்ணீர் இப்போதே இல்லை. அக்டோபர் மாதத்திலேயே இந்த நிலை என்றால் வரவிருக்கும் மாதங்களில் என்னவாகும் என்று நினைத்து பாருங்கள். வறட்சி பாதித்த பகுதிகளை இந்த அரசு புறக்கணித்துவிட்டது.
மராட்டியத்தில் வறட்சி நிலவும் அதேவேளையில், பா.ஜனதா அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி சி.பி.ஐ. போன்ற அமைப்புகளின் பிரச்சினைகளில் தலையிடுவதில் மும்முரமாக உள்ளது.
இந்த தலையீடு மத்தியில் மட்டும் அல்ல மாநில அளவிலும் உள்ளது. 90 சதவீத போலீசாரின் பணிகளில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு தலையிடுகிறது. போலீசார் அவர்களின் பேச்சுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினமும் யாரையாவது கைது செய்யக்கோரியோ அல்லது விடுவிக்க கோரியோ அதிகாரிகளுக்கு போன் அழைப்புகள் வருகின்றன. இதனால் அரசு மீது போலீசார் வெறுப்பில் உள்ளனர்.
இவ்வாறு அசோக் சவான் பேசினார்.
Related Tags :
Next Story