‘பஸ் டே’ போன்று மின்சார ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது


‘பஸ் டே’ போன்று மின்சார ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

‘பஸ் டே’ போன்று மின்சார ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் மாநகர பஸ்களில் ‘பஸ் டே’ கொண்டாட்டம் எனும் பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்யும் அடாவடியை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மின்சார ரெயிலில் ஆயுதபூஜை கொண்டாடி கல்லூரி மாணவர்கள் மீண்டும் தங்களது அராஜக போக்கை கையாண்டிருக்கின்றனர்.

சென்னை சென்டிரல் அருகேயுள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் திருத்தணி நோக்கி மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்கள் மேளதாளங்கள் முழங்க அந்த ரெயிலில் ஏறி ஆடி பாடினர்.

ரெயில்வே விதிகளை மீறி தண்டவாளத்தில் இறங்கி மின்சார ரெயில் என்ஜினில் ‘பச்சையப்பன் கல்லூரி ஆயுதபூஜை’ என்று அச்சிடப்பட்டிருந்த பேனரை கட்டினர். ‘அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கி போக மாட்டோம்’, உள்ளிட்ட வார்த்தைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்டிரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் மின்சார ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர்.

ரெயில்வே விதிகளை மீறியும், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காகவும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

* கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி கிளனரான கோத்தி (வயது 29) மணலியில் லாரியில் சரக்கு ஏற்றி செல்வதற்காக வந்தார். நேற்று முன்தினம் இரவு சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைநசுங்கி இறந்தார்.

* சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

* புழல் பகுதியை சேர்ந்த செல்வி (31) என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த வழக்கில் பாடியை சேர்ந்த சரவணன் (34), கோபி (24), விநாயகம் (33) ஆகிய 3 பேரை ரோந்து போலீசார் கைது செய்தனர்.

* காசிமேட்டில் சலீம் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து லேப்-டாப், செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிய வழக்கில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* குடும்பத்தகராறில் மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் (46) நேற்று இறந்தார்.

* நன்மங்கலம் பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான முருகானந்தம் (34) தனது வீட்டு முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

* பள்ளிக்கரணையில் ரோந்து போலீசாரிடம் சிக்கிய மேல்மருவத்தூரை சேர்ந்த குமார் (42) பட்டாபிராமை சேர்ந்த வினோத்குமார் (34) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மேடவாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் வீடுகளில் திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 60 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

* வட மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர்குமார் (25) நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை அருகே சைக்கிளில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர் மீது மோதி ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்தனர். அவர்களில் சுரேஷ் (21) பிடிபட்டார். தப்பிய சதீசை தேடிவருகிறார்கள்.

* கள்ளக்காதலியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் விரக்தி அடைந்த ஆவடி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பசுபதி (47) நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்க்கும் செல்வராணியின் கணவர் ஸ்ரீஹரி (45) திருநின்றவூரில் வசித்து வந்தார். நேற்று அவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* கீழ்ப்பாக்கம் போலீசார் பூந்தமல்லி பகுதியில் ரோந்து சென்றபோது செல்போன் திருடர்களான ஓட்டேரியை சேர்ந்த இப்ராகீம் (22), திருவல்லிக்கேணியை சேர்ந்த சாமுவேல் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

* நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் யூசப் (29) என்பவரை குடிபோதையில் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் விட்டுச்சென்ற கார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story