தர்மபுரியில் குடோனில் பதுக்கப்பட்ட ரூ.50 லட்சம் பட்டாசு சிக்கியது: 2 பேர் கைது
தர்மபுரியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசு போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரியில் காந்தி சிலை அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குடோனில் 3 தளங்களில் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக சரவெடிகள், பல்வேறு வகையான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகளை வாங்கி அவற்றை பார்சல்களாக அட்டை பெட்டிகளில் அடைத்து லேபிள்களை ஒட்டி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கிருபானந்தன்(வயது 48), அங்கு பணிபுரியும் ஊழியர் சரவணன்(38) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது உரிய அனுமதியை பெறாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்காக பதுக்கியிருப்பது தெரியவந்தது.
பதுக்கப்பட்ட பட்டாசுகளின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குடியிருப்புகளும், வணிகவளாகங்களும் அதிக அளவில் உள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த இந்த பகுதியில் ஏராளமான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கிருபானந்தன், ஊழியர் சரவணன் ஆகியோரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story