கடலூர் அரசு மருத்துவமனையில்: மேலும் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி


கடலூர் அரசு மருத்துவமனையில்: மேலும் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி
x
தினத்தந்தி 26 Oct 2018 3:30 AM IST (Updated: 26 Oct 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. தொடர்ந்து பகல் நேரத்தில் வெயிலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவுமாக இருந்து வருகிறது. இதையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்து வருகிறது. இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக அரசு தலைமை மருத்துவமனை, வட்ட அரசு மருத்துவமனைகளில் காலையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நெரிசலை தவிர்க்க நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இவர்களில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களில் கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த சிவபிரகாசம் உள்ளிட்ட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர்கள் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிவபிரகாசம் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து நேற்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்றனர்.

இதில் சிலருக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன்(வயது 34), வீரமுத்து(72), குறிஞ்சிப்பாடி கோதண்டராமபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(39), கடலூர் கேப்பர்மலையை சேர்ந்த தர்ஷினி(8), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரித்தீஷ்குமார்(8) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story