சேலத்தில் கொசுப்புழு இல்லாத வீடுகளில் மகிழ்ச்சி ‘ஸ்டிக்கர்’


சேலத்தில் கொசுப்புழு இல்லாத வீடுகளில் மகிழ்ச்சி ‘ஸ்டிக்கர்’
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொசுப்புழு இல்லாத வீடுகளில் மகிழ்ச்சி ‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம்,

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார மேம்பாட்டு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் தினமும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 8-ல் மாருதி நகர் குடியிருப்பு பகுதியில் கொசுப்புழு இல்லாத வீடுகளை கண்டறிந்து, பொதுமக்களை பாராட்டி மகிழ்ச்சி ‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் பணியை ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுபவர்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு வருடாந்திர காலண்டர்கள், வில்லைகளும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த வருடாந்திர காலண்டரில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு வாரந்தோறும் வருகை தரும் களப்பணியாளர்கள் ஆய்வு செய்த பின்னர் கையொப்பம் இடுவர். இப்பணிகள் அவ்வப்போது உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். வீடுகளில் தண்ணீர் சேகரித்திட பயன்படுத்தும் பிளாஸ்டிக் டிரம்கள், பாத்திரங்கள் போன்றவற்றை தூய்மையாக உள்ளதா? என பார்க்கப்படும்.

மேலும் சிமெண்டு தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்படும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், திரவ வடிவிலான குளோரினை நேரடியாக செலுத்துவதற்காக 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளை தூய்மையான பகுதிகளாக மாற்றி, டெங்கு தடுப்பு பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லையெனில், அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை, பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு பொது மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மாறாக சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் ரவி, காமராஜ், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story