திருமணமான 8 மாதத்தில்: தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 8 மாதத்தில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியகாளிதாஸ். அவருடைய மகன் பாண்டியராஜ் (வயது 23). பெயிண்டர். இவருக்கும், ஆண்டிப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் நாகலட்சுமி (வயது 19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது நாகலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகலட்சுமியின் தந்தை முருகன் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கணவர் பாண்டியராஜ், மாமனார் பெரியகாளிதாஸ், மாமியார் ராணியம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தினர். இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பாண்டியராஜ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே நாகலட்சுமிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரீத்தா விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story